ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்குப் பின்னாலும் பல தோல்விகள் ஒளிந்துள்ளன
என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மின்சார பல்பினைக் கண்டுபிடித்தவர்
தாமஸ் ஆல்வா எடிசன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்காக அவர்
எவ்வளவு உழைத்தார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.
பல்பு எரிய முக்கியமான ஒரு பொருள் டங்ஸ்டன். பல்பில் டங்ஸ்டனைப்
பயன்படுத்தினால் வெற்றி பெறமுடியும் என்பதை அவர் சுமார் ஆயிரம்
முயற்சிகளுக்குப் பின்னரே கண்டுபிடித்தார். அதற்கு முன்னால் மூங்கில் இழை,
சிறு கம்பி முதலிய பல பொருட்களை இணைத்துப் பார்த்தார். ஆனால் அவை அனைத்தும்
தோல்வியிலேயே முடிந்தன. இவ்வாறு ஆயிரம் தோல்விகளுக்குப் பின்னரே டங்ஸ்டன்
இழையினை பல்பிற்குள் வைத்து சோதித்து, எடிசன் வெற்றி கண்டார்.
அப்போது ஒரு நண்பர் அவரிடத்தில் கேட்டார்.
“ஆயிரம் முறை தோல்வியைச் சந்தித்தீர்களே. உங்களுக்கு கஷ்டமாக இல்லையா?”
“நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு முறையும் ஒரு சோதனையை எவ்வாறு செய்யக்கூடாது என்பதைத் தெரிந்து கொண்டேன். இறுதியில் வெற்றியும் பெற்றேன்”.
சாதனையாளர்கள் தங்களுடைய தோல்விகளை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்
என்பதையே இது காட்டுகிறது. தோல்விகளை தோல்விகளாகக் கருதாத காரணத்தினால்தான்
சிலர் மட்டும் வாழ்க்கையில் வெற்றியைச் சந்திக்கிறார்கள்.
ஒவ்வொருமுறை தோற்கும்போதும் பெரியதொரு வெற்றியை நோக்கி நீங்கள்
பயணிக்கிறீர்கள் என்பதை உணருங்கள். பதினைந்தாவது மாடிக்குச் செல்ல
வேண்டுமென்றால் பதினான்கு மாடிகளை நீங்கள் நிச்சயம் கடந்துதான் ஆக
வேண்டும். தோல்விப்படிகளை மெல்ல மெல்லக் கடந்துதான் வெற்றியின் முகவரியை
நீங்கள் அடைய முடியும். வெற்றியின் முகவரியை அடைய விரும்பினால் நிச்சயம்
நீங்கள் தோல்விகளைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும்.
தோற்றுப் பாருங்கள். அப்போதுதான் வெற்றியின் முகவரி என்ன என்பது உங்களுக்குப் புரியும். வெற்றிகளும் உங்களைத் தேடி வரும்
No comments:
Post a Comment