Friday, 26 April 2013

மன்னனும் சிலந்தியும்

ஸ்காட்லாந்து தேசத்தின் மன்னன் இராபர்ட் புரூஸ். ஸ்காட்லாந்து நாட்டிற்கும் இங்கிலாந்து நாட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் அடிக்கடி போர் நடைபெற்றது. இதில் பலமுறை இராபர்ட் புரூஸிற்குத் தோல்வியே பரிசாகக் கிடைத்தது. இதனால் இராபர்ட் புருஸின் ஆட்சி நிரந்தரத்தன்மை இல்லாமல் இருந்தது. 

மேலும் அந்நாட்டில் ஜான் பாலியால் என்பவன் இராபர்ட் புரூஸிற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான். இராபர்ட் புரூஸை ஒழித்து, தானே மன்னர் பதவியில் அமர வேண்டும் என்று அவன் துடித்துக் கொண்டிருந்தான். 

இங்கிலாந்து மன்னரான எட்வர்டு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இருவருக்கும் சமசரம் செய்து வைக்கிறேன் என்று இடையில் புகுந்தார். ஆனால் தான் நினைத்தபடியே இரண்டு பேரையும் சமரசம் செய்யாமல் அவர்களையும் ஸ்காட்லாந்து தேசத்தையும் மிகக் கேவலமாகப் பேசினார்.

எட்வர்டு மன்னரின் இத்தகையக் கேவலமான பேச்சைக் கேட்ட இராபர்ட் புரூஸ் ஆத்திரமடைந்தான். எனவே மீண்டும் ஒரு முறை இங்கிலாந்தை எதிர்த்துப் போரிடுவது என்று முடிவு செய்து போர் தொடுத்தான். இம்முறையும் புரூஸிற்குத் தோல்வியே மிஞ்சியது. விரக்தி அடைந்த இராபர்ட் புரூஸ் ஒரு மலைப் பகுதிக்குச் சென்றான். அங்கே இருந்த ஒரு குகைக்குள் நுழைந்து தன் நாட்களை வேதனையுடன் கழிக்கலானான்.

ஒருநாள் அந்தக் குகைக்குள் இருந்த சிலந்தி ஒன்று தனக்கான வலையைப் பின்னிக் கொண்டிருந்தது. வலை பின்னும்போது காற்றினால் நூலிழையைப் பிடித்தவாறு இங்கும் அங்கும் அந்தச் சிலந்தி ஆடிக்கொண்டிருந்தது. அந்த நூலிழையினை குகையின் சுவற்றில் ஒட்ட வைக்க வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து வலையைப் பின்ன முடியும். அந்தச் சிலந்தி இதற்காகப் பலமுறை போராடியது. ஆனால் அதனால் அந்த நூலின் முனையைக் குகைச் சுவற்றில் ஒட்ட வைக்க முடியவில்லை. குகைக்குள் உட்கார்ந்திருந்த இராபர்ட் புரூஸ் சிலந்தியின் இந்த போராட்டத்தை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

சிலந்தியின் போராட்டம் சில மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் சிலந்தி ஓயவே இல்லை. தொடந்து போராடி ஒரு கட்டத்தில் அது நூலிழையினைச் சுவற்றில் ஒட்டி, தனது வலையினை வெற்றிகரமாகப் பின்னி முடித்தது. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட இராபர்ட் புரூஸின் மனதில் ஒரு வெறி பிறந்தது. ஒரு சின்னஞ்சிறு சிலந்தி போராடி அடைந்த வெற்றி அவன் மனதில் ஒரு புது உத்வேகத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்து உடனே புறப்பட்டுச் சென்று தன் படைவீரர்களை ஒன்று திரட்டினான். இராபர்ட் புரூஸ் இங்கிலாந்துப் படையினைத் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறியோடு போர்க்களத்திற்குச் சென்றான். தன் வீரர்களை ஊக்கப்படுத்திப் போர் நடத்தினான். இறுதிவரை தளராமல் போராடிய சிலந்திக்கு வெற்றி கிடைத்ததுபோல இராபர்ட் புரூசும் தன் வீரர்களைக் கொண்டு இங்கிலாந்து நாட்டுப் போர் வீரர்களைத் துரத்தி அடித்தான். வெற்றி வீரனாய் ஸ்காட்லாந்து தேசத்தின் வலிமையான மன்னனாய்ப் பதவி ஏற்றுக் கொண்டான்.

No comments:

Post a Comment