மனித வாழ்க்கையை இன்று பயம் கவ்வி இருக்கிறது. அதனால் எப்போதும், எதுவும்
நடக்கலாம் என்ற அச்ச உணர்வு மேலோங்கி நிற்கிறது. மக்கள் எல்லாவற்றையும்
தற்போது பயம் கலந்த பீதியுடன் பார்ப்பதால், வதந்திகள் ஏராளமாக உருவாகின்றன.
எளிதாக பரவுகின்றன.
அசாம் மாநில மக்களுக்கு எதிராக கிளம்பிய
வதந்தியால், அவர்கள் பீதி அடைந்து எல்லா மாநிலங்களில் இருந்தும் அணிஅணியாக
கிளம்பினார்கள். அவர்கள் ஒட்டுமொத்தமாக சொந்த மாநிலத்தை நோக்கி படையெடுக்க
இந்தியாவே அதிர்ந்தது. அடுத்து மருதாணி பூசியதில் வதந்தியையும் கலந்து
பூசி, தமிழகத்தை சில மணி நேரம் பீதியில் தடுமாறவைத்தார்கள். பிறந்த குழந்தை
ஒன்று பேசி, ஆரூடம் சொன்னதாக அடுத்த புரளியை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.
இவைகள்
மட்டுமல்ல! இப்போது வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி, ஊருக்கு ஊர்
வதந்திகள் அவ்வப்போது பற்றவைக்கப்படுகின்றன. பள்ளிக்கூடத்திற்கு போன்
போட்டு, `குண்டு வைச்சிருக்கோம்' என்கிறார்கள். சில பிரபலங்களை குறிவைத்து,
`அவர் இறந்து போய்விட்டாராமே' என்ற வதந்தியை கிளப்புகிறார்கள்.
பிரச்சினைக்குரிய காதலிக்கு போன் போட்டு, `அந்த மாதிரியான உன் படம்
நெட்டில் வந்திருக்கிறது பார்த்தாயா?' என்கிறார்கள். இவற்றை பரப்ப, நவீன
தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்துவதால் அவைகள் ஒரு சில நிமிடங்களிலே உலகம்
முழுக்க வதந்`தீ'யை பற்றவைத்துவிடுகிறது.
- வதந்தி உருவாக என்ன காரணம்? ஏன் அது பரப்பப்படுகிறது?
- வதந்திகளால் உருவாகும் விளைவுகள் என்ன?
-
வதந்தியால் நீங்களோ, உங்கள் குடும்பத்தினரோ பாதிக்கப்படாமல் இருக்க என்ன
செய்யவேண்டும்? என்பது போன்ற ஏராளமான கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார்,
மனோதத்துவ நிபுணர் முனைவர் பி.என்.பிரபாகரன். இவர் மனோதத்துவம் பற்றி
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து பி.எச்டி. பட்டம் பெற்றவர். அவர்
சொல்கிறார்..
"மனிதன் கருவாகும் நாளில் இருந்து- பிறந்து- வளர்ந்து-
கடந்து போன நொடிவரை உள்ள நிகழ்வுகள் அவனது மூளையில் பதிவாகின்றன. அந்த
மூளையைத்தான் மனது என்று கூறுகிறோம். பயம், பீதி, வதந்தி போன்றவை எல்லாம்
இங்குதான் உருவாகிறது.
வதந்தியை ஒரு பொருட்டாக நினைக்காமல்
எதிர்த்து நின்று மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் போராடுகிறவர்களுக்கு
பயம் ஏற்படாது. `எந்த முயற்சியும் இனி எடுபடாது. வருவதை ஏற்றுக்கொள்ளத்தான்
வேண்டும்' என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறவர்களையும் பயம் பாதிக்காது. இந்த
இரு நிலைக்கும் இடைப்பட்டவர்களுக்குதான் பயம் அதிகம் ஏற்படும். இவர்கள்தான்
பீதி, வதந்தியால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
உண்மையில் அளவோடு
பயம் இருப்பது நல்லது. அளவான பயம், நாம் தேவையில்லாத விஷயங்களில் போய்
மாட்டிக்கொள்வதைத் தடுக்கும். அதனால் பயம் முன்னெச்சரிக்கை உணர்வை
உருவாக்கி நல்லதும் செய்கிறது.
மனிதனை சமூக விலங்கு என்பார்கள்.
அதனால், தான் எடுக்கும் முடிவு அறிவற்றது என்று அவனுக்கே புரிந்தாலும்கூட,
இந்த சமூகத்தின் பக்கமாக சாய்ந்து நிற்கவே விரும்புவான். அதுதான் தனக்கு
பாதுகாப்பு என்றும் நம்புவான். இதுவே வதந்தியை பரப்புவதற்கும், வதந்தியை
நம்புவதற்கும் உரிய காரணமாகும். தன்னைச் சுற்றி இருக்கும் பத்துபேர்
வதந்தியால் பயப்படும்போது, தானும் பயப்படுவான். தன்னைச் சுற்றி இருக்கும்
பத்து பேர் ரெயிலைப் பிடிக்க ஓடினால் அவனும் ஓடுவான். ரெயிலில் லேசாக புகை
தென்படும்போது, தப்பிப்பதாக நினைத்துக்கொண்டு பத்து பேர் ஓடும் ரெயிலில்
இருந்து குதித்தால் இவனும் குதித்துவிடுவான்.
ஆதி மனிதன்
விலங்குகளோடு வாழ்ந்து, விலங்குகளோடு போராடி, தன்னை பாதுகாத்துக்கொண்டே
நாகரீகத்தை நோக்கி வந்தவன். அதனால் `தம்மை எப்படியாவது
பாதுகாத்துக்கொள்ளவேண்டும்' என்ற எண்ணம் மனிதர்களின் மரபணுவிலே பதிவாகி
இருக்கிறது. இயல்பான நிலையில் மனிதன் இருக்கும்போது, அவன் தன் பாதுகாப்பு
பற்றி நின்று நிதானித்து முடிவு எடுப்பான். ஆபத்தான வதந்திகளுக்கு அவன்
ஆட்படும்போது அவனுக்குள் பதட்டம், பீதி உருவாகும். அப்போது அவனை சட்டென்று
ஆழ்மனது இயக்கத் தொடங்கிவிடும். யோசித்து முடிவெடுக்கும் இயக்கத்துக்கு ஆழ்
மனது தடைபோட்டுவிட்டு, அவனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து,
`எல்லோரும் ஓடுகிறார்கள். நீயும் ஓடு' என்று தூண்டும். இப்படி
தூண்டப்படுவதால்தான் ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் ரெயிலைப் பிடிக்க
ஓடுகிறார்கள். வதந்திகள், பலகீன மான மனதுடையவர்களை அப்படியே
நம்பவைத்துவிடும்.
வதந்தியை மனிதன் நம்பி பீதி அடைந்துவிட்டால்,
அச்சம் தோன்றும். அச்ச சூழலில் இருந்து அவன் தப்பிக்க அதிக எனர்ஜி
தேவைப்படும். அதற்காக இதயம் அதிகமாக துடித்து தயார்படுத்தும். ரத்த ஓட்டம்
அதிகரிக்கும். ஒருவர் வதந்தியை நம்பி உச்சகட்ட பீதி அடையும்போது அவர் கண்
விழி விரிந்து பெரிதாகும். கை, கால் உதறும். எந்த வேலையிலும் கவனம் செலுத்த
முடியாது. ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருப்பார்.
இப்படி
ஒருவர் பீதி அடையும்போது, `கிளப்பப்பட்டிருப்பது வெறும் வதந்திதான்.
நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்' என்பதை அருகில் இருப்பவர்கள், அவர்
உணரும்படி செய்யவேண்டும். பீதி அடைந்தவர் மூச்சை மெதுவாக உள் இழுத்து
வெளியே விடவேண்டும். அவர் தனக்குள்ளே, `நான் மிகவும் பாதுகாப்பாக
இருக்கிறேன். எனக்கு எந்த ஆபத்தும் இல்லை' என்று பத்து நிமிடங்களுக்கு
ஒருமுறை சொல்லிக்கொள்ளவேண்டும். அதே நேரத்தில் அந்த பீதி உண்மையானதாக
இருந்தால் அந்த சூழலில் இருந்து தப்பிப்பதற்கான முயற்சிகளையும் அவர்
மேற்கொள்ளவேண்டும்.
எல்லா வதந்திகளையும் ஒருவர் நம்பி, காரணமற்ற
பீதிக்கு உள்ளாகிவிட்டால் அது மனநோயின் அறிகுறியாக மாறிவிடும். அப்போது
அவர், `தன்னை யாரோ ஒருவர் துரத்திக்கொண்டே இருக்கிறார். எல்லோரும் தன்னை
உற்றுப்பார்க்கிறார்கள். போலீஸ் என்னை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது.
வீட்டை விட்டு வெளியே செல்லவே தனக்கு அச்சமாக இருக்கிறது' என்றெல்லாம்
பேசத் தொடங்கி விடுவார். அப்போது அவரிடம் யாராவது, `நீ மனநிலை சரியில்லாத
ஆள்' என்று கூறிவிட்டால், அவர் அப்படியே ஆகிவிடவும் செய்வார். அதனால்
வதந்திகளை நம்பி, பீதி அடையாத அளவிற்கு மனதை ஒவ்வொருவரும்
பலப்படுத்திக்கொள்ள வேண்டும்.
வதந்திகளை எல்லோரும் உடனே
நம்பிவிடமாட்டார்கள். பாரம்பரிய ரீதியாக மனோபலம் கொண்டவர்களும், அனுபவங்கள்
மூலம் தைரியத்தையும், மனப்பக்குவத்தையும் பெற்றவர்களும் வதந்திகளை எளிதாக
நம்பமாட்டார்கள். ஒரு ஆண் வதந்தியை நம்பிவிட்டால் உடனே அவர் மட்டும்
அதிலிருந்து தப்பிக்கும் வழியை பார்ப்பார். ஆனால் ஒரு பெண் தன் குடும்பமே
தப்பவேண்டும் என்ற நிலையில் சிந்திப்பார்.
இப்போது அசாம் மக்கள்
திடீர் வதந்தியால் சொந்த மாநிலத்திற்கு திரும்பிவிட்டார்கள். தமிழகத்தில்
உள்ள பலர் வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் வேலைபார்த்துக்
கொண்டிருக்கிறார்கள். அவர்களும் இதுபோன்ற வதந்திகளால் பாதிப்பு அடையாமல்
இருக்க, மனதை பலப்படுத்தும் பயிற்சிகளை மனோதத்துவ நிபுணர்களிடம்
பெறவேண்டும்.
இதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது. சிறுவயதில்
இருந்தே குழந்தைகளை தைரியமானவர்களாக வளர்க்கவேண்டும். இருட்டு, பேய்,
பிசாசு என்றெல்லாம் அவர்களை பயப்படுத்தக்கூடாது. தனியாக செல்லவும், தனியாக
படுக்கவும் தயார்படுத்தவேண்டும். பத்துபேர் ஒருவிஷயத்தை சரி என்று
சொன்னாலும், அந்த விஷயத்தை தன் அறிவுக்கு உள்படுத்தி ஆராய்ந்து பார்க்கும்
பக்குவத்தை குழந்தைகளிடம் வளர்க்கவேண்டும். வதந்தியை பரப்புவது மூலம் தன்
மனதை சந்தோஷப்படுத்திக்கொள்ளும் மனஊனம் கொண்டவர்கள் சிலர் நம்மைச்
சுற்றிலும் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது முரண்பாடான
மகிழ்ச்சிக்காகவும், சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவும் வதந்தியை
கிளப்பிவிட்டுக்கொண்டே இருப்பார்கள். அதை அப்படியே நம்பிவிடக்கூடாது என்பதை
குழந்தைகளுக்கு விளக்கவேண்டும்.
வதந்திகளை பரப்புவது
எதிர்காலத்தில் அன்றாட விஷயங்களாகிவிடும். அதை எதிர்கொள்ள மனோதைரியம் கொண்ட
சமூகத்தை நாம் உருவாக்கவேண்டும். வதந்திகளை நம்பலாமா? கூடாதா? வதந்திகளை
எப்படி ஆராயவேண்டும்? வதந்தி, உண்மையாக இருந்தால் உடனடியாக எப்படி
செயல்பட்டு அதில் இருந்து தப்பவேண்டும் என்பன போன்ற விஷயங்களை
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவ- மாணவிகளுக்கு பாடமாக
கற்றுத்தரவேண்டும். இளைய தலைமுறையை மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும்
பலப்படுத்தவேண்டும்''- என்கிறார்.
No comments:
Post a Comment