Friday 31 May 2013

மறதிக்கு என்ன மாற்று வழி ?

எல்லாம் தெரிந்தவர்கள் அறிவாளிகள் அல்ல, தெரியாதவர்கள் முட்டாள்களும் அல்ல'' என்பார்கள். அந்த விஷயத்தில் இன்று பலரையும் ஆட்டுவிப்பது மறதி. ஆங்கிலத்தில் "அம்னீஷியா' என்றழைக்கப்படுகிறது.

மெத்தப் படித்தவர்களாகட்டும்,படிக்காதவர்களாகட்டும் மந்தமாகவே இருக்கின்றனர். எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் சந்தேகம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது. உதாரணமாக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் எத்தனை என்ற கேள்விக்கு உடனே யாராவது பதில் கூறுகிறார்களா என்றால் இல்லை.

அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பொது இடம், பள்ளி, அலுவலகம் இப்படி பல்வேறு இடங்களுக்குச் சென்று நிகழ்ச்சி நடத்தும் தொகுப்பாளர் பொது அறிவுக் கேள்விகள் கேட்டார். அவர் கேட்ட சாதாரண கேள்விக்குக் கூட பலர் சரியான பதிலைக் கூற முடியாமல் தவித்ததைக் காண நேர்ந்தது. உண்மையாகவே அப்படி இருந்தார்களா அல்லது நடித்தார்களா என்று புரியவில்லை.

ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்ற கேள்விக்கு, நன்கு படித்தவர்கள் கூட பதில் அளிக்கமுடியாமல் அவதிப்பட்டனர். இது ஓர் உதாரணத்துக்காக மட்டுமே.

மற்றபடி நிஜமாகவே இன்று பலரும் போலி முகமூடிகளை அணிந்துகொண்டுதான் நடமாடுகின்றனர். பல்கலைக்கழகம், கல்லூரிகளில் போலிப் பேராசிரியர்கள், அரசு வேலைகளில் படிப்பறிவும், பொதுஅறிவும் குறைந்தவர்கள், தகுதியற்றவர்கள் பலர் பணிகளில் இருக்கின்றனர்.

வங்கிகளில் படிவங்களைத் தயக்கம் இல்லாமல் நிரப்புபவர்கள் ஒரு சிலர் மட்டுமே. பணவிடைத்தாள் (மணியார்டர்) படிவத்தை நிரப்ப இன்றும் அஞ்சலகங்களில் தடுமாறுபவர்களைப் பார்க்கலாம்.

சாதாரண அடிப்படை அறிவுகூட இல்லாமல் இன்று பலர் வாழ்ந்துவருகின்றனர். அன்றாடச் செய்திகளை வாசிக்காமலும், பிற விஷயங்களைப் பற்றி அறிந்துகொள்ளாமலும் இருக்கின்றனர்.

மேலும் சிலர், வீடுகளில் மின்தடை ஏற்பட்டாலோ, பழுது ஏற்பட்டாலோ அதை எப்படி சரிசெய்வது என்பதைக் கூட தெரிந்து வைத்திருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு சோம்பலால் அவதியடைகின்றனர்.

பொது அறிவில் இன்று இளம் தலைமுறையினர் மிகவும் பின்தங்கியிருக்கின்றனர். பத்தாம் வகுப்பு வரை "எப்படியாவது' படித்து தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். அதன்பிறகு தொழில் கல்வி, கணினி சார்ந்த படிப்புகளில் கவனம் செலுத்தினால் போதும் என்றே கருதுகின்றனர்.

கல்லூரிகளில் சேர்ந்து பயில்வோரில் பெரும்பாலானோர் தமிழ், வரலாறு, ஆங்கில இலக்கியம் போன்ற பாடங்களைத் தவிர்ப்பதைக் காணமுடிகிறது. அனைவரும் கணிதம், அறிவியல், தொழில்கல்வி, வர்த்தகம், பொருளாதாரம் போன்ற பாடங்களை மட்டுமே பயின்றால் போதும் எனக் கருதுகின்றனர்.

இப்படி கறிவேப்பிலை போல பாடங்களைத் தெரிவு செய்யும்போது தமிழ், ஆங்கிலம், வரலாறு, இலக்கணம், இலக்கியம் ஓராண்டுக்கு மட்டும் பெயரளவுக்கு துணைப் பாடமாக வைக்கப்படுகிறது. மற்றபடி அந்தப் பாடங்களை அவர்கள் வாழ்நாளில் தொட்டே பார்ப்பதில்லை. இப்படி இருப்பதால் இந்திய, உலக வரலாறு, சுதந்திரப் போராட்டம், தமிழின் பெருமை, மொழியின் முக்கியத்துவம், அறிஞர்கள், இலக்கியவாதிகள், விஞ்ஞானிகள் போன்ற அடிப்படை விவரங்களை அறவே அறியமுடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே மறந்துபோன விஷயங்களை மறுபடியும் வாசிப்பது, தெரிந்துகொள்வது இன்று அவசியமானதொன்றாகும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்கள் எத்தனை இளைய தலைமுறையினருக்குத் தெரியும். இதைத் தவிர்க்க பழைய செய்திகள், சம்பவங்கள், வரலாறுகளை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். நிறைய நூல்கள், செய்திகள், பொதுஅறிவு விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விஷயங்களைத் தெரியாதவர்கள் உண்மையில் மறதியால் அல்லல்பட நேரிடுகிறது. முன்பெல்லாம் நேர்முகத் தேர்வுக்குச் செல்வோர் குறைந்தபட்சம் அன்றாட விஷயங்கள், பொது அறிவுச் செய்திகளைத் தெரிந்துகொண்டு செல்வார்கள். இன்று இணையதளம், அலைபேசி இருப்பதால் தகவல் தெரிந்துகொள்ளலாமே என்ற மெத்தனப் போக்கும், அலட்சியமும் காணப்படுகிறது.

அரசு வேலைக்கான தேர்வு நடைபெறும்போது மட்டும் அவசர அவசரமாக கையேடுகளை வாங்கி அதை வாசிப்பவர்கள்தான் இன்று அதிகம். தாங்கள் படித்தவற்றை நினைவுபடுத்துவதோ, அதைத் தொடர்ச்சியாக மனதில் வைத்திருப்பதோ காணமுடியாத ஒன்றாகி விட்டது. அதனால் மறதியை விரட்ட மாற்று வழியை நாமே உருவாக்கிக் கொள்வதே சிறந்தது. நிறைய நூல்களை வாசிப்பதும், பழைய சம்பவங்களை நினைவில் கொள்வதும் இன்று அனைவருக்கும் அவசியம்.

Friday 26 April 2013

வெற்றிக்குணங்கள் ….

ஒரு துறையில் வெற்றியடைந்து சாதனையாளராக உலகால் அடையாளம் காணப்படுவது சிறப்பு என்றால் பலதரப்பட்ட துறைகளில் பல சாதனைகள் புரிந்து சரித்திரம் படைக்க முடிவது சிறப்பின் சிகரமே.

அப்படிப்பட்ட சிகரங்கள் சரித்திரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு அபூர்வமே. ஏனென்றால் ஒரு துறையில் சாதனை புரியவே ஒரு வாழ்க்கை ஆயுள் போதாதென்று பலரும் எண்ணுகையில் அந்தக் குறுகிய வாழ்க்கையில் பல துறைகளில் சாதனைகள் புரிந்திட ஒருவரால் முடிகிறது என்றால் அது கவனிக்கப்பட வேண்டிய வாழ்க்கை அல்லவா? அது எப்படி சாத்தியமாயிற்று என்றறிய ஆர்வம் காட்டுதல் வெற்றியடையத் துடிக்கும் அனைவருக்குமே இயல்பல்லவா?

எழுத்தாளர், விஞ்ஞானி, அரசியல் வல்லுனர், கல்வியாளர், பத்திரிக்கையாளர், இசைக்கலைஞர், தத்துவஞானி, நாட்டின் உயர்பதவிகள் பலவற்றை அலங்கரித்தவர் என்றெல்லாம் ஒரே மனிதரைப் பற்றி சொல்ல முடியும் என்றால் அது பிரமிக்க வைக்கும் செய்தியே. ஏனென்றால் இவற்றில் சில ஒன்றுக்கு ஒன்று சிறிதும் சம்பந்தப்படாத, அல்லது நேர்மறையான துறைகளே. அவர் சாதனை புரிந்த துறைகளாக வேறு சிலவற்றின் பெயர்களைக் கூடக் கூறலாம். இத்தனை அடைமொழிகளுக்கும் பொருந்தக் கூடிய ஒரு மனிதராக உலகம் ஒரே ஒருவரைத் தவிர வேறொருவரை இதுவரை கண்டதில்லை. அவர் தான் பெஞ்சமின் ·ப்ராங்க்ளின்.

அவர் – அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதிக் கையெழுத்திட்ட ஐவரில் ஒருவர், அமெரிக்காவை உருவாக்கியவர்களில் ஒருவர், இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர், மின்சாரம் குறித்த பல ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர், அர்மோனிகா என்ற ஒருவகைக் கண்ணாடியைக் கண்டுபிடித்தவர், பெனிசில்வேனியா பல்கலைக்கழகம் அமையக் காரணமாய் இருந்தவர், வயலின் மற்றும் கிடார் கலைஞர், சிறந்த செஸ் ஆட்டக்காரர், நிறைய விஷயங்களைப் பற்றி நிறைய எழுதியவர் – இப்படி இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம். ஒரு வாழ்க்கையில் இத்தனை முத்திரைகள் பதிக்க முடிந்தவர் தன் வாழ்க்கையில் மிக நல்ல மனிதர் என்றும் அறிந்தவர்களால் கருதப்பட்டார். இதை விடப் பெரிய வெற்றி வாழ்க்கை இருக்க முடியுமா?

அப்படிப்பட்ட வெற்றி வாழ்க்கை வாழ்ந்த மனிதர் தான் பின்பற்ற வேண்டிய பண்புகளாகப் பதின்மூன்று குணங்களை தன் இளமையிலேயே குறித்துக் கொண்டு வாழ முயற்சித்ததாகக் கூறினார். அவை-

1) மிதத்தன்மை : உண்பதிலும், அருந்துவதிலும் மிதத்தன்மை முக்கியம். ஊக்கத்தைக் கெடுக்கும் அளவு உண்ணாதே. வெறி கொள்ளும் அளவு குடிக்காதே.
2) நாவடக்கம் : பிறருக்கோ, உனக்கோ நலம்புரியும் சொற்களை அன்றி வேறு சொற்க¨ளைப் பேசாதே. வெறும் நேரம் போக்கும் பேச்சில் எப்போதும் கலந்து கொள்ளாதே.
3) ஒழுங்குமுறை : உன் பொருள்கள் ஒவ்வொன்றையும் உரிய இடத்தில் வைக்கப் பழகு. உன் தொழிலின் ஒவ்வொரு பகுதிக்கும் உரிய ஒரு காலத்தை ஒதுக்கி வை.
4) உறுதியுடைமை : செய்ய வேண்டியவற்றைச் செய்ய உறுதி கொள். உறுதி கொண்டவற்றைத் தவறாது செய்.
5) சிக்கனம் : உனக்கோ, பிறருக்கோ நன்மை செய்வதற்காக அல்லாமல் வேறெதற்காகவும் பணத்தை செலவழிக்காதே. அதாவது, வீண் செலவு செய்யாதே.
6) முறையான உழைப்பு : காலத்தை சிறிதும் இழக்காதே. எப்போதும் பயனுள்ள எதையாவது செய்து கொண்டிரு. தேவையற்ற செயல்கள் யாவையும் ஒழித்து விடு.
7) வாய்மை : பிறரைப் புண்படுத்தும் சூழ்ச்சி செய்யாதே. இரண்டகமில்லாமலும், நேர்மையுடனும் சிந்தனை செய். பேசும் போதும் அப்படியே பேசு.
8) நேர்மை : தீங்கு செய்து அதன்மூலம் யாருக்கும் தீமை உண்டாக்காதே. அது போல கடமைகளை செய்யாமல் விட்டும் அடுத்தவருக்கு தீங்கு செய்யாதே.
9) நடுநிலையுணர்வு : எதிலும் அதீதத் தன்மையை விலக்கு. உனக்கு இழைத்த தீங்குகளுக்காகக் கூட நீ அடுத்தவரிடம் சினம் கொள்ளாதிரு.
10) துப்புரவு : உடல், உடை, இருக்குமிடம் ஆகியவற்றில் எத்தகைய துப்புரவுக் கேட்டுக்கும் இடம் அளிக்காதே.
11) மன அமைதி : சின்னச் சின்ன விஷயங்களுக்காகவோ, தவிர்க்க முடியாத மற்றும் தற்செயலாய் நிகழும் நிகழ்ச்சிகளுக்காகவோ மன அமைதி இழக்காதே.
12) ஒழுக்கமுடைமை : அயர்வு அல்லது பலவீனம் அடையும் அளவுக்கோ, உன்னுடைய மற்றும் அடுத்தவருடடைய அமைதிக்கோ, புகழுக்கோ கேடு உண்டாக்கும் அளவுக்கோ இன்பம் நுகராதே.
13) பணிவுடைமை : இயேசுநாதரையும், சாக்ரடீசையும் பின்பற்று.

பெஞ்சமின் ·ப்ராங்க்ளின் இந்த பண்புகளைத் தன் வாழ்க்கையில் இளமையில் இருந்தே பின்பற்றத் துவங்கியது தான் தன் வெற்றிகளுக்கும் மன அமைதிக்கும் காரணம் என்று கருதினார். எல்லா நேரங்களிலும் இதைப் பின்பற்றியதில் வெற்றி பெற முடிந்ததில்லை என்பதை ஒத்துக் கொள்ளும் அந்தப் பேரறிஞர் ஆனாலும் திரும்பத் திரும்ப இவற்றைத் தன் வாழ்க்கையில் பின்பற்ற முயன்றதாகவும் சிறிது சிறிதாக பின்பற்றுவதில் வெற்றி பெற முடிந்ததாகவும் கூறுகிறார்.

அவர் வாழ்வில் எளிய வாழ்க்கையே இந்தப் பண்புகளுக்கு அஸ்திவாரமாக இருந்தது என்றும் சொல்லலாம். தன் சுய சரிதத்தில் ஓரிடத்தில் கூறுகிறார். “நான் எளிய வாழ்க்கையையே முக்கியமாக எடுத்துக் கொண்டேன். ஏனென்றால் நல்லறிவையும் மூளைத் தெளிவையும் தரத் தக்க பண்பு அதுவே. வாழ்க்கையில் இடைவிடாது குறுக்கிடும் மாயக்கவர்ச்சிகளை எதிர்த்து நிற்கவும், பழைய பழக்கங்களின் ஓய்வொழிவில்லாத ஈர்ப்பாற்றலைத் தடுத்து சமாளிக்கவும் தளராத விழிப்புணர்வு தேவை. மூளைத் தெளிவும் அமைதியும் இல்லா விட்டால் இந்தத் தளரா விழிப்புணர்வு ஏற்படாது”

பல துறைகளில் வெற்றி பெறுவதில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட மனநிலையிலும் ஒரு நிறைவை அவர் காண இந்த 13 பண்புகளும் அவருக்கு உதவியிருக்கின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகமிருக்க முடியாது. ஏனென்றால் இந்தப் பதின்மூன்றில் எந்த நல்ல பண்பும் விட்டுப் போகவில்லை. ஒரு மாபெரும் வெற்றியாளர் பின்பற்றி வெற்றி பெற்ற பண்புகளை நாமும் ஏன் பின்பற்றி வெற்றி பெறக் கூடாது?

உங்கள் மனநிலை எப்படி இருக்கும் ?

ஒரு துறையில் நீங்கள் சில ஆராய்ச்சிகள் செய்கிறீர்கள். உங்கள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் சில விஷயங்களைக் கண்டுபிடிக்கிறீர்கள். அதை உலகுக்கு அறிவிக்க நினைக்கிறீர்கள். அந்த அறிவிப்பு விழாவுக்குஅந்தத் துறையில் உச்சாணிக் கொம்பில் உள்ள அறிஞரை அழைக்கிறீர்கள். அவர் உங்களுடைய ஆதர்ச புருஷரும் கூட. நீங்கள் மிகுந்த சிரத்தையுடன் உங்கள் கண்டுபிடிப்புகளைப் பற்றிச் சொல்கிறீர்கள். சொல்லி முடித்த பின் உங்கள் ஆதர்ச புருஷரின் கருத்துக்காகக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கண்டுபிடிப்புகளை உலகப்புகழ் பெற்ற அவர் “வடிகட்டிய முட்டாள்தனம்” என்று வர்ணிக்கிறார். பத்திரிக்கையாளர் கூட்டத்தில் முட்டாள்தனம் என்று தான் சொன்னதற்கான காரணங்களைப் புட்டு புட்டு வைக்கிறார். 

உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்கள் தன்னம்பிக்கை எந்த அளவில் நிற்கும்? அந்தத் துறையில் தொடந்து இருப்பீர்களா இல்லை அதற்கு முழுக்குப் போட்டு விடுவீர்களா?

இப்படி ஒருவர் வாழ்வில் உண்மையாகவே நடந்தது. அவர் சந்திரசேகர் என்ற வானியல் விஞ்ஞானி. அவர் உலகப்புகழ் பெற்ற வானியல் அறிஞர் ஆர்தர் எட்டிங்டன் என்பவரின் எழுத்துக்களால் உந்தப்பட்டு நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். தன் 24ம் வயதிற்கு முன்பே (1935ல்) நீண்ட ஆராய்ச்சிக்கு பின் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட முடிவு செய்தார். அவர் ஆர்தர் எட்டிங்டனுக்கும், மற்ற வானியல் அறிஞர்களுக்கும், அறிவியல் பத்திரிக்கைகளுக்கும் அழைப்பு விடுத்து அவர்கள் முன்னிலையில் தன் கண்டுபிடிப்புகளை மிகுந்த ஆர்வத்தோடு வெளியிட்டார். 

ஆனால் யாருடைய எழுத்துக்களால் கவரப்பட்டு அவர் அந்தத்துறையில் ஆராய்ச்சி நடத்தினாரோ, அந்த எட்டிங்டனே இவருடைய நட்சத்திர ஆராய்ச்சியின் முடிவுகளை முட்டாள்தனம் என்று வர்ணித்தார். இவர் கூறியது போல நட்சத்திரங்கள் இயங்குவதில்லை என்று கூறிய அவர் அதற்கான விளக்கங்களையும் அளித்தார். அந்தத்துறையில் ஒரு மேதையான அவரே அப்படிக் கூறியதால், சந்திரசேகர் கருத்துக்களில் உடன்பாடு இருந்த மற்ற அறிஞர்கள் வாயையே திறக்கவில்லை.

சந்திரசேகர் பின்னாளில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த போது கூறினார். “அவர் என்னை அந்தக் கூட்டத்தில் முட்டாளாக்கி விட்டார். எனக்கு அது ஒரு பெரிய தலைகுனிவாக இருந்தது. அந்தத்துறையில் ஆராய்ச்சிகளை முற்றிலுமாகக் கைவிட்டு விடுவது பற்றி கூட யோசித்தேன்.”

தோல்வியும் மனத்தளர்வும் எல்லோருக்கும் சகஜம் என்றாலும் வெற்றியாளர்களுடைய சோர்வும், மனத்தளர்வும் மிகக்குறுகிய காலமே அவர்களிடம் காணப்படுகின்றன. அவர்கள் மிக வேகமாக அதிலிருந்து மீண்டு விடுகிறார்கள். இந்த விஷயத்தில் தான் தோல்வியாளர்கள் முக்கியமாக வித்தியாசப்படுகிறார்கள். இவர்கள் அந்த நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு பின் வாங்கி விடுகிறார்கள். பின் அந்தப்பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை. 

அமெரிக்க இந்தியரான சந்திரசேகரும் அந்த கசப்பான அனுபவத்திலிருந்து விரைவாகவே மீண்டு தன் ஆராய்ச்சிகளை அந்தத் துறையில் தொடர்ந்தார். சந்திரசேகருடைய எந்தக் கண்டுபிடிப்புகளை எட்டிங்டன் முட்டாள்தனம் என்று வர்ணித்தாரோ அதற்கு 48 வருடங்கள் கழித்து 1983ல் நோபல் பரிசு கிடைத்தது. வானியல் துறையில் ஒரு வரையறைக்கு “Chandrasekhar’s Limit” என்ற பெயர் சூட்டப்பட்டது.

அவர் ஒரு வேளை பின் வாங்கியிருந்தால், தன் கண்டுபிடிப்புகளை தீயிலிட்டுக் கொளுத்தி விரக்தியுடன் அந்தத் துறையிலிருந்து விலகியிருந்தால் என்னவாயிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எத்தனை பெரிய அறிஞரானாலும் சரி அவருடைய கருத்து எல்லா சமயங்களிலும் சரியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்வது நல்லது.

சந்திரசேகருக்குத் தூண்டுகோலாய் இருந்தது அந்தத் துறையில் இருந்த இயல்பாகவே இருந்த அதீத ஆர்வம் தான். வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாது ஒன்றில் தொடர்ந்து சாதிக்க வேண்டுமானால் அந்த ஆர்வம் உண்மையானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்து, போராட்டங்களுக்குப் பிறகு வெற்றியைப் பெற்ற நல்ல உள்ளங்கள் என்றும் அந்தத் துறையில் வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாகவும், அக்கறையுடன் உதவுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு சந்திரசேகர் ஒரு நல்ல உதாரணம்.

அவர் விஸ்கான்சின் நகரில் உள்ள யெர்க்ஸ் வானிலை ஆராய்ச்சிக் கூடத்தில் பணியாற்றி வந்தார். அப்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் துறையைக் கற்பிக்கும் பகுதி நேரப் பேராசிரியராகவும் பணி புரிந்தார். வாரம் இரண்டு நாள் வகுப்பு. விஸ்கான்சினிலிருந்து 80 கி.மீ தனது காரில் பயணம் செய்து பாடம் நடத்தினார். கடும் குளிர்காலத்தில் சாலைகளில் எல்லாம் பனிக்கட்டிகள் உறைந்திருக்கும் என்பதால் காரை ஓட்டிச் செல்ல மிகுந்த சிரமப்பட்டார் அவர். ஆனாலும் விடாமல் உற்சாகமாகச் சென்று அவர் பாடம் நடத்தியது எத்தனை பேருக்குத் தெரியுமா? வகுப்பறையில் இருந்த இரண்டே பேருக்குத் தான்.

அவருடைய சிரமத்தைப் புரிந்து கொண்ட சிகாகோ பல்கலைக்கழக நிர்வாகிகள் “இரு மாணவர்களுக்காக இந்தக் கடும்பனியில் 160 கி.மீ பயணம் செய்து நீங்கள் வரவேண்டியதில்லை. எங்கள் பல்கலைகழக விதிகளின் படி ஏதாவது பாடத்தில் நான்கு மாணவர்களுக்குக் குறைவாக இருந்தால் அந்தப் பேராசிரியர் வகுப்பு எடுக்க வேண்டியதில்லை” என்று சொன்னார்கள்.

ஆனால் அதற்கு சந்திரசேகர், “ஆர்வத்தோடு படிக்க வரும் இந்த இரு மாணவர்களை ஏமாற்ற விரும்பவில்லை” என்று கூறி தொடர்ந்து ஒரு வகுப்பு கூட தவறாமல் அந்தக் கோர்ஸின் காலமான ஆறு மாதங்களும் பாடம் எடுத்தார். அவருடைய முயற்சியின் பலன் என்ன தெரியுமா? Chen Ning Yang, Tsaung-Dao Lee என்ற அந்த இரு மாணவர்களும் கூட பின்னாளில் நோபல் பரிசு பெற்று அவருடைய முயற்சிக்குப் பெருமை சேர்த்தார்கள்.

சந்திரசேகரை அந்தக் கடும்பனிப் பாதை பெரியதாகப் பாதிக்கவில்லை என்பதற்குக் காரணமே அவர் அதை விடக் கடுமையான வாழ்க்கைப் பாதைகளைக் கடந்து வந்திருக்கிறார் என்பதே. இளம் வயதில் எட்டிங்டன் கருத்தால் தன்னுடைய ஆர்வத்தை இழந்து விடாமல் காத்துக் கொண்ட அந்த மேதை அதே ஆர்வம் கொண்ட அந்த மாணவர்களுக்கும் அது குறைந்து விடக்கூடாது என்று கொட்டும் பனியில், உறைபனிப் பாதையில் சென்று பாடம் நடத்தினாரே அது இன்னும் பெருமைக்குரிய காரியம் அல்லவா?

உண்மையில் ஒரு துறையில் பேரார்வம் உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் அதில் ஏதோ சாதித்துப் பிரகாசிக்க முடியும் என்று அர்த்தம். மற்றவர்கள் உங்கள் ஒளியை மறைத்து விட முடியாது. உங்கள் பேரார்வமும், அது தூண்டும் உழைப்புமாகச் சேர்ந்து உங்களைத் தீபமாகப் பிரகாசிக்க வைக்கும். அப்படித் தீபமாகப் பிரகாசிப்பது பெருமைக்கும், பாராட்டுக்கும் உரிய விஷயம் தான். ஆனால் நீங்கள் அணையும் முன் பல தீபங்கள் ஏற்ற உதவியாக இருந்தால் உங்கள் ஜோதி நீங்கள் அணைந்த பின்னும் பல தீபங்களாக ஒளிவீசிக் கொண்டேயிருக்கும். நீங்கள் காலத்தை வென்று பிரகாசித்துக் கொண்டிருக்க முடியும்.

பிரகாசிப்பீர்களா?

கவனிப்பே அவசியம்… பேசுவதை காது கொடுத்துக் கேளுங்கள்…

நமது குடும்பத்தினரோ, உறவினரோ, நண்பரோ நம்மிடம் ஒரு விஷயத்தைக் கூறும் போது அதனை காது கொடுத்துக் கேட்க வேண்டியது மிகவும் அவசியம். அதுவும் அவரது பிரச்னை பற்றி கூறும் போது அதனை உதாசீனப்படுத்தக் கூடாது.

குடும்பத்தில் தினமும் ஒரு வேளையாவது அனைவரும் அமர்ந்து ஒன்றாக பேசி சிரித்து உண்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்று பல மருத்துவக் கட்டுரைகளும், மன நல நிபுணர்களும் அறிவுறுத்துகின்றனர். 

இதற்குக் காரணம் இருக்கிறது. அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேச நமக்கெல்லாம் இப்போது நேரம் கிடைப்பதில்லை. ஒரு வேளை உணவையாவது சேர்ந்து உண்ணும் போது, ஒருவரிடம் ஏற்பாடும் மாற்றங்களை மற்றவர்கள் உணர்ந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தும்.

எதிர்மறைச் சிந்தனைகள் எப்போதுமே உற்சாகத்தை அளிப்பதில்லை. அதுபோலத்தான் மனச்சோர்வு அடைந்தவர்களுக்கு எதிர்மறைச் சிந்தனைகள் அதிகமாக இருக்கும்.

சிலர் எப்போதும் எதிர்மறையாகவே பேசுவார்கள். அது இயல்பாக இருக்கலாம். ஆனால், சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர்கள் திடீரென எதிர்மறையாக பேச ஆரம்பித்தால் எங்கேயோ பிரச்னை இருக்கிறது என்பதை குடும்பத்தார் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு விஷயத்தை சகோதரியோ, சகோதரனோ நம்மிடம் கூறி, இவ்வாறு எனக்கு ஒரு பிரச்னை உள்ளது. அதனை பெற்றோரிடம் கூறி விடாதே என்று சொன்னால்.. அங்கு ரகசியத்தைக் காப்பதா அல்லது சகோதரி அல்லது சகோதரனைக் காப்பதா என்ற கேள்வி எழும். 

இதற்கு பதில் சகோதரி அல்லது சகோதரனைக் காப்பதே முக்கியம் என்பதாகும். எனவே, உடனடியாக இதனை பெற்றோரிடம் தெரியப்படுத்தி, நமது சகோதரி அல்லது சகோதரியை பிரச்னையில் இருந்து விடுபட வைக்க வேண்டும்.

இதே விஷயம் நண்பர்களுக்கும் பொருந்தும், நமது நண்பனைப் பற்றி அவர்களது பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டியது அவர்களது உரிமை. எனவே அதனை தாராளமாக பெற்றோரிடம் கூறி பிரச்னையில் இருந்து விடுபட பெற்றோரின் உதவியை நாடலாம்.

எதுவாக இருப்பினும், ஒரு பிரச்னை உங்களிடம் வரும் போது அதனை காது கொடுத்துக் கேளுங்கள். ஒருவர் சாதாரணமாகக் கூறும் செயலுக்குப் பின் மிகப் பெரிய விஷயம் நடந்திருக்கலாம். அவர்கள் கூறும் விதத்தை நீங்கள் கவனமாகக் கேட்டால் தான் அதன் ஆழத்தை புரிந்து கொள்ள முடியும்.

எனவே குழந்தையாக இருந்தாலும், பெரியவராக இருந்தாலும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்னையை கவனமாகக் கேட்டு அதற்கேற்ற தீர்வினை உடனடியாகக் காண முயலுங்கள். 

பெரும்பாலும், ஒருவர் தனது பிரச்னைகளை கவனித்துக் கேட்கிறார் என்பதே, பிரச்னைக்குள்ளானவர்களுக்கு பலம் சேர்க்கிறது. 

மேலும், அதற்கான தீர்வினைக் காண நீங்கள் முயலுவது அவர்களை மேலும் நம்பிக்கைக் கொள்ள வைக்கும். 

எனவே, நம்முடன் இருப்பவர்களில் மனச்சோர்வடைந்தோருக்கு உதவுவோம்.. மனநலத்தைக் காப்போம்..

தற்கொலைக்கு முயன்றவர் . . . பின்னர்

துரதிர்ஷ்டவசமாக துரதிர்ஷ்டம் தனியாக வருவதில்லை. சில நேரங்களில் படையாக சேர்ந்து வந்து தாக்குகின்றன. பல முனைத் தாக்குதல் வரும் போது, இதற்கெல்லாம் தீர்வு ஒன்று கண்ணுக்கெட்டிய வரை தெரியாத போது மனிதன் உடைந்து போவது இயல்பே. இந்த சந்தர்ப்பங்களில் ‘குடி’ போன்ற தற்காலிக மறதிக்கான வழிகளை சிலர் நாடி அதை நியாய்ப்படுத்துவதும் உண்டு. ஒருசிலர் வாழ்க்கையை முடித்துக் கொண்டு நிரந்தத் தீர்வு காண முனைவதும் உண்டு.

அப்படி தற்கொலை முடித்தவர் தான் பக்மினிஸ்டர் ·புல்லர் என்ற மேலை நாட்டுக்காரர். 32 வயதில் திவாலாகி வாழ்வில் எல்லா நம்பிக்கையும் இழந்து, ஒரு டிசம்பர் இரவில் கொட்டும் பனியில், லேக் மிச்சிகன் என்ற பரந்த நீர்நிலையில் குதித்து தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள எண்ணி வந்தார். அந்த தண்ணீரில் குதிக்கும் முற்பட்டவர் அதில் பிரதிபலித்த நட்சத்திரங்கள் நிறைந்த ஆகாயத்தைப் பார்த்தார். அந்த அழகு அவர் மனதை அசைக்க அண்ணாந்து ஆகாயத்தைப் பார்த்தார்.

கொட்டும் பனி, மின்னும் நட்சத்திரம், பரந்த வானம் எல்லாம் கண்டபோது பிரபஞ்சத்தின் எல்லையில்லாத அமைதியான பேரழகில் ஒரு கணம் அவர் மனம் லயித்தது. அந்த நேரத்தில் பிரபஞ்சம் அவருக்கு ஒரு செய்தியைச் சொன்னதாக அவர் உணர்ந்தார். “உன் உயிரை மாய்த்துக் கொள்ள உனக்கு உரிமை இல்லை. நீ உன்னுடையவன் அல்ல. என்னுடையவன்.”

தன்னைப் பிரபஞ்சத்தின் அங்கமாக உணர்ந்த அந்தக் கணம் அவர் வாழ்வின் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. புதிய வாழ்க்கையை ஆரம்பித்தார். வயது முதிர்ந்து அவர் இறந்த போது அவருக்கு கணித மேதை, பொறியாளர், கவிஞர், கட்டிடக்கலை நிபுணர் என்ற பல அடைமொழிகளும், 170 கண்டுபிடிப்புகளுக்கு உரிமையாளர் என்ற புகழும் இருந்தது.

32 வயதில் அனைத்து வழிகளும் மூடப்பட்டதாய் நினைத்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள முற்பட்ட மனிதர் அன்று இறந்திருப்பாரானால் இன்று அவரை யாரும் நினைவில் வைத்துக் கொண்டிருக்க சாத்தியமில்லை.
வாழ்க்கையில் பின் வாங்குபவர்கள் என்றுமே வாழ்ந்த சுவடில்லாமல் போய் விடுகிறார்கள். எனவே என்றுமே பின்வாங்காதீர்கள். அடி மேல் அடி விழும் போது, எல்லாமே முடிந்து விட்டது என்று தோன்றும் போது, இனி என்ன இருக்கிறது என்ற விரக்தி வரும் போது பக்மினிஸ்டர் ·புல்லருக்குப் பிரபஞ்சம் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒரு ஆங்கிலக் கவி அழகாய் சொன்னார்.
When you get into a tight place and everything goes against you,
until it seems as though you cannot hang on a minute longer,
never give up then, for that is just the place and time that the tide will turn.
- Harriet Stowe

(ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் போது, எல்லாமே உனக்கு எதிராக மாறும் போது, இனி ஒரு நிமிடம் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்று தோன்றும் அந்த முக்கிய தருணத்தில் கண்டிப்பாக தோல்வியை ஒப்புக் கொண்டு பின்வாங்கி விடாதே. ஏனென்றால் அந்த இடத்தில் அந்தத் தருணத்தில் தான் அலை உன் பக்கமாக திரும்பப் போகிறது)

எல்லாமே முடிந்து விட்டது என்று நினைப்பதே ஒரு தனிப்பட்ட கருத்து தான். அந்த தனிப்பட்ட கருத்தும் கூட அடிமேல் அடி வாங்கி நொந்து இருக்கும் பலவீனமான நேரத்தில் பிறக்கும் பொய்யான கருத்து. அது பிரபஞ்ச உண்மை அல்ல. பலவீனமான நேரங்களில் தீர்மானங்களை எடுக்காதீர்கள். அவையும் பலவீனமானதாகவே இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் உள்ளே கேட்கும் சந்தேக இரைச்சல்களைக் கேட்பதை விட்டு மனதை அமைதியாக்குங்கள். பக்மினிஸ்டர் ·புல்லருக்குக் கூட இயற்கையின் அழகில் தன்னை மறந்து லயித்த அந்த நேரத்தில் தான் பிரபஞ்சம் பேசியது. 

அப்படி இயற்கையின் அழகிலோ, மேலே குறிப்பிட்டது போல நல்ல தன்னம்பிக்கை தரும் வரிகளைக் கொண்ட நூல்களிலோ, இனிமையான இசையிலோ ஈடுபட்டு மனதை அமைதியாக்கி கவனியுங்கள். பிரபஞ்சம் உங்களுக்கும் சலிக்காமல் அந்த செய்தியைச் சொல்லும் – “நீங்கள் சாமானியர்கள் அல்ல. எல்லையற்ற பிரபஞ்சத்தின் வீரியமான ஒரு அங்கம்”
எல்லையற்ற பிரபஞ்சத்தின் அங்கம் நீங்கள் என்றால் உங்களுக்கு எல்லை எப்படி இருக்க முடியும்.? எல்லைகள் நமது சிற்றறிவால் நாமாக ஏற்படுத்திக் கொள்வதே அல்லவா? நூறு வழிகள் உங்களுக்கு அடைந்திருக்கலாம்.

ஆனால் கோடானு கோடி வழிகளை பிரபஞ்சம் ஏற்படுத்தி இருக்கும் போது வெறும் நூறில் அனைத்துமே முடிந்து விட்டதாக நீங்கள் எப்படி எடுத்துக் கொள்ள முடியும். இன்னும் பல கோடி வழிகள் உங்களுக்காக பிரபஞ்சத்தால் வகுக்கப்பட்டு இருக்கின்றன. எனவே சோர்வை உதறி விட்டு உற்சாகத்தோடு நிமிருங்கள். புதிய வழிகளை ஆராயுங்கள். வெற்றி அலை உங்கள் பக்கம் திரும்பத்தான் போகிறது.

கலங்கரைவிளக்கம்

ஒரு சமயம் இரண்டு அமெரிக்க போர்ப்படைக் கப்பல்கள் கடலில் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் பயணித்துக் கொண்டு இருந்தன.பனிமூட்டத்தினால் சில நாட்கள் தொடர்ந்து அவர்களுடைய பயணம் தாமதப்பட்டு வந்தது.

ஒருநாள் இரவு கடும் பனிமூட்டத்தில் கடற்பகுதி மூடியிருந்ததால் முன்னால் சென்று கொண்டு இருந்த போர்ப்படைக் கப்பலின் மேற்தளத்தில் கப்பலின் கேப்டன் நின்று மேற்பார்வை இட்டுக் கொண்டு இருந்தார்.

அப்போது தொலைநோக்கி வழியாக கண்காணித்துக் கொண்டு இருந்த கடற்படை வீரர் கேப்டனிடம் சொன்னார். “ஐயா நாம் போகின்ற பாதையில் சற்று தொலைவில் விளக்கு வெளிச்சம் தெரிகிறது. இன்னொரு கப்பலாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுகிறேன்”

“அது நின்று கொண்டு இருக்கிறதா இல்லை, நகர்கிறதா?”
“நகராமல் தான் இருக்கிறது”

“உடனடியாக அவர்களுக்கு சிக்னல் அனுப்பு. நமது கப்பல் போகின்ற வழியில் அது நிற்கிறது என்று தெரிவி. 20 டிகிரி விலகிப் போகச் சொல்.”

அப்படியே சிக்னல் அனுப்பப் பட்டது. அங்கிருந்து உடனடியாக மறுமொழி வந்தது. “நீங்கள் 20 டிகிரி விலகிப் போவது நல்லது”.

எரிச்சலடைந்த கேப்டன் சிக்னல் அனுப்பினார். “நான் கேப்டன் சொல்கிறேன். 20 டிகிரி விலகிப் போங்கள்”

மறுமொழி உடனடியாக வந்தது. “ஐயா நான் கப்பல்படையின் இரண்டாம் நிலை ஊழியன். தயவு செய்து 20 டிகிரி விலகிப் போங்கள்”

கேப்டனுக்கு ஒரு இரண்டாம் நிலை ஊழியன் இப்படி கீழ்படியாமல் நடந்து கொள்வது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. “இது போர்ப்படைக் கப்பல். உடனடியாக 20 டிகிரி விலகுங்கள்”

பதில் உடனடியாக வந்தது. “இது கலங்கரை விளக்கம்” 

மறு பேச்சு இல்லாமல் போர்ப்படைக் கப்பல்கள் தங்கள் பாதையை 20 டிகிரி மாற்றிக் கொண்டன.

(இது அக்கப்பலில் பயணித்த கடற்படை வீரர் கடற்படையினரின் பத்திரிக்கையில் தெரிவித்து அதை ஸ்டீபன் கோவே தன் புத்தகம் ஒன்றில் மேற்கோள் காட்டியிருந்தார்).

ஒவ்வொருவர் வாழ்க்கைப் பாதையிலும் இப்படி சில கலங்கரை விளக்கங்கள் குறுக்கிடத்தான் செய்கின்றன. 

நம் விருப்பப்படி மாறவோ, நமக்காக விலகி வழி விடவோ செய்யாத சில இருக்கத்தான் செய்கின்றன

மாற்றவே முடியாத இது போன்ற குறுக்கீடுகள் வரும் போது நாம் தான் நம் பாதையை சற்று மாற்றிக் கொண்டு செல்ல வேண்டும். 

அதை விட்டு விட்டு நான் மாற மாட்டேன், அதை மாற்றியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து எதிர்த்து நின்றால் அது வடி கட்டிய முட்டாள்தனமாகவே இருக்கும்.

இப்படிப் பட்ட சூழ்நிலைகளில் தங்களை மாற்றிக் கொள்ள நேரிடுவது சிலருக்கு கௌரவக்குறைவாக தோன்றுவதுண்டு.

மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கேப்டனுக்கு வந்த கோபம் போல “ஈகோ” பிரச்சினை எழுவதுண்டு. ஆனால் சந்தர்ப்பங்களின் தன்மை அறிந்து தெளிவுடன் மாறுவதும், வளைந்து கொடுப்பதும் பக்குவமேயன்றி தோல்வியல்ல.

ஒரு ஆங்கிலக் கவிஞன் கடவுளிடம் பிரார்த்தனை செய்தான். “கடவுளே! உலகில் மாற்ற முடிந்த விஷயங்களை மாற்றும் சக்தியையும், மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும், இந்த இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்து தெளியும் ஞானத்தையும் எனக்குத் தருவாயாக!”

கடவுளிடம் நாம் வேண்டுவதும் அதுவாகவே இருக்கட்டும்.

தனித்துவவாதிகளை உலகம் விட்டுவைப்பதில்லை.

ஒரு மனிதனின் குழந்தைப் பருவத்தில் இருந்தே அவனை மற்றவர்கள் போல் மாற்றும் முயற்சி ஆரம்பிக்கிறது. “அந்தப் பாப்பாவப் பாரு எப்படி சமத்தா இருக்கு”. குழந்தையில் இருந்தே மற்றவர் சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் அவன் திணிக்கப் பெறுகிறான். “அவனைப் போல் இரு. இவனைப் போல ஆகு…..” என்ற கட்டளைகள் வார்த்தைகளாகவும், சூட்சுமமாகவும் அவன் மனதில் ஏற்றப்படுகின்றன. இது தான் சிறந்தது, இது பிரயோஜனமில்லாதது என்பதை மற்றவர்கள் அவனுக்காக தீர்மானித்து விடுகிறார்கள். மற்றவர் வகுத்த பாதையில் பயணம் நடக்கிற வரையில் அவன் விமரிசனங்களை சந்திக்க வேண்டியதில்லை. 

தனித்துவம் என்பதை பொதுவாக சமூகம் சகித்துக் கொள்வதில்லை. தப்பித் தவறி ஒருவன் தன் தனித்துவத்தில் சாதனை புரிந்து வெற்றி பெற்ற பின் அவனை ஓஹோ என்று போற்றுகிற சமூகம் அவனுடைய ஆரம்பகாலக் கட்டங்களில் அவனுக்கு உதவும் விதமாக இருப்பதில்லை என்பது கசப்பான உண்மை. 

எத்தனையோ துறைகளில் தங்கள் தனித் திறமையால் முத்திரை பதித்தவர்கள் வாழ்க்கை சரிதத்தைப் படிக்கையில் நாம் இதை உணர முடியும்.
ஆனால் கடவுள் படைப்பில் எதுவுமே இன்னொன்றின் நகலாக இருப்பதில்லை என்பதே மகத்தான உண்மை. ஒரு பெற்றோருக்கு இலட்சக்கணக்கில் குழந்தைகள் பிறக்க முடிந்தால் கூட எதுவும் இன்னொன்றின் நகலாக இருக்க முடியாது என்று விஞ்ஞானம் சொல்கிறது.
இறைவன் அவ்வளவு நுணுக்கமாக வேறுபடுத்திப் படைக்கும் மனிதனை ஒரே மாடலில் வார்த்து மாற்றி விட சமூகம் விடாமல் முயற்சி செய்வது ஆச்சரியமே அல்லவா? 

ஆனால் சோகம் என்ன என்றால் இந்த சமூகத்தின் முயற்சி பெரும்பாலானவர்கள் விஷயத்தில் வெற்றி பெற்று விடுவது தான். 

ஒவ்வொரு மனிதனும் ஒரு தனித் திறமையோடு தான் படைக்கப்படுகிறான். அதை விருத்தி செய்து சாதிக்கவே அவன் இயல்பு அவனைத் தூண்டும். 

ஆனால் எத்தனை பேரால் தங்கள் அந்தராத்மாவின் குரலைக் கேட்க முடிகிறது? அதன்படி நடக்க முடிகிறது? சமூகம் தன் இரைச்சலால் அந்த சின்னக் குரலை மூழ்கடித்தல்லவா விடுகிறது.

“என்ன இந்தக் கோர்ஸா எடுத்திருக்கிறாய்? முடிச்சா என்ன சம்பாதிக்க முடியும். பேசாம பி.ஈ பண்ணா மாசம் குறைந்த பட்சம் ஐம்பதாயிரமாவது சம்பாதிக்கலாம்”

“என்ன எழுத்தாளராகணுமா? அவனவன் எழுதின பேப்பருக்கான செலவு கூட திருப்பிக் கிடைக்காம கஷ்டப்படறான். அதெல்லாம் விட்டுட்டு இப்படி செய்தா காலம் பூரா கஷ்டப்படாம இருக்கலாம்”

இப்படி எத்தனையோ லாஜிக்கான, மறுக்க முடியாத வாதங்கள். மாறுபட்டு நடக்கவும் விமரிசனங்களைத் தாங்கவும் முடியாமல் போகும் போது, இத்தனை பேர் சொல்வது தப்பாக இருக்க முடியுமா என்று குழப்பம் வரும் போது, நம்முள் ஒலிக்கும் குரல் நிஜமா, பிரமையா என்ற சுய சந்தேகம் வரும் போது பெரும்பாலானவர்கள் சமூகம் வார்க்கும் வார்ப்புகளாக, இயந்திரங்களாக மாறி விடுகிறார்கள். தங்களைத் தொலைத்துக் கொண்டு மற்ற நிழல்களின் நிழல்களாக வெறுமையாகக் கரைந்து போகிறார்கள்.

நீங்கள் நீங்களாக இருக்கும் வரை நிறைவைக் காண்பீர்கள். மற்றவர்களின் நகல்களாக மாற முயற்சிக்கும் போது இயற்கையில் இருந்து விலகி செயற்கையாக வாழத் துவங்கும் போது நிறைவு மறைய ஆரம்பிப்பதைக் காண்பீர்கள். 

வாழ்க்கையை முடித்து விட்டு இறைவனை சந்திக்கும் போது கடவுள் “நீ ஏன் பில் கேட்ஸ் போல் ஆகவில்லை என்று கேட்கப் போவதில்லை. நீ ஏன் நீயாக வாழவில்லை? உன் வாழ்க்கை வாழத் தானே உன்னைப் படைத்தேன். நீ ஏன் அடுத்தவர் வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறாய்” என்று தான் கேட்கப்போகிறார். மாறாக மற்றவர்களின் நகல்களாக ஆக்கத் துடிப்பது சைத்தானின் வேலை. இதை நான் ஒரு கவிதையாக இன்னொரு பதிவில் தந்திருந்தேன். 

எனக்கென்று ஒரு வரம்
சாத்தான் நேரில் வந்தது
வரமொன்று கேள் என்றது
பொன்னும் பொருளும் போகங்களும்
போதிய வரை தர நின்றது
நான் நானாக வேண்டும்
எனக் கேட்டேன்.
நீ நீயானால் உன்னிடம்
எனக்கென்ன வேலை என்றது
ஏமாற்றத்துடன் சென்றது

எனவே உங்கள் உள்ளே ஒலிக்கும் குரலை உன்னிப்பாகக் கேளுங்கள். உங்களுக்கு இயற்கையாக உள்ள திறமைகளைக் கண்டறிந்து வளர்த்துக் கொள்ளுங்கள். இயற்கையாக உள்ள ஈடுபாடுகளை ஆராயுங்கள். இயற்கைக்கு ஒத்து கட்டுப்பாட்டுடன் வாழுங்கள். அடுத்தவர் செய்கிறார்களே என்று உங்களுக்கு ஒவ்வாத எதையும் செய்ய போகாதீர்கள். மற்றவர்கள் மெச்ச வேண்டுமென்று செயற்கையாக நடந்து கொள்ளாதீர்கள். மற்றவர்களிடமிருந்து மாறுபட வெட்கப்படாதீர்கள். 

திருபாய் அம்பானியும், நரசிம்ம மூர்த்தியும் தங்கள் துறையில் சாம்ராஜ்ஜியத்தையே ஏற்படுத்திக் கொண்டார்கள், கொடி கட்டிப் பறந்தார்கள் என்று அவர்களைக் காப்பியடிக்க ஜேசுதாசும், குன்னக்குடி வைத்தியநாதனும் முயன்று இருந்தால் நாம் இரு துறைகளின் மேதைகளைப் பார்ப்பதற்கு பதிலாக இரு அனாமதேயங்களை அல்லவா பார்க்க வேண்டி இருந்திருக்கும்.
எனவே இந்தத் துறை தான் சிறந்தது, இந்த தொழில் தான் உயர்ந்தது, இந்த முறை தான் சரி என்று முன்கூட்டியே கணித்து உங்கள் மீது திணிக்க முனைபவர்களை அலட்சியம் செய்யுங்கள். உங்களுக்கு இயற்கையாக உள்ள ஈர்ப்பும் திறமையும் எதன் மீது உள்ளதோ அதில் உங்களுக்கு இருக்கும் தனித் தன்மையோடு ஆர்வத்தோடு முனையுங்கள்.

மற்றவர்கள் சொல்வது எல்லாம் முட்டாள்தனம், அலட்சியப்படுத்துங்கள் என்று சொல்ல வரவில்லை. அவர்கள் சொல்வதைக் கவனியுங்கள். அவர்கள் அனுபவ அறிவின் வாக்குகளை சிந்தியுங்கள். ஆனால் முடிவு மட்டும் உங்களுடையதாக இருக்க வேண்டும். உங்கள் உண்மையான தேடலையும், குணாதிசயங்களையும் ஒட்டியே அமைய வேண்டும். அதுவே உங்களுக்கு நிறைவைக் கொடுக்கும். 

மற்றவர் வாழ்வில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். மற்றவர் வாழ்க்கையில் இருந்து ஊக்கம் பெறுங்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கையின் நகலாக வாழ்ந்து விடாதீர்கள். 

Francis Bacon எழுதிய வரிகளில் ஒன்று உலகப் புகழ் பெற்றது-”Character is Destiny”. அதன் கூடவே வரும் இன்னொரு வாசகமும் அர்த்தம் பொதிந்த அருமையான உண்மை. – “Imitation is Suicide”. இந்த வாசகத்தை நம் மனதில் பதித்துக் கொள்வது மிகவும் நல்லது. பிறரது நகல்களாக வாழ்வது தற்கொலை செய்து கொள்வது போன்றது.

முதலில் உங்களைக் கண்டறியுங்கள். மற்றவர்களை ஆராய்ச்சி செய்வதை விட்டு விட்டு உங்களை அமைதியாக ஆழமாக ஆராய்ந்தால் மட்டுமே உங்களை நீங்கள் கண்டறிய முடியும். இல்லா விட்டால் மற்றவர்கள் உங்களைப் பற்றிச் சொல்வதன் தொகுப்பையே “நாம்” என்று தவறான கணிப்பில் வாழ்ந்து விடுவீர்கள். உண்மையான உங்களைக் கண்டறிந்த பின், உள்ளே ஒலிக்கும் அந்தக் குரலைக் கேட்க ஆரம்பித்த பின் உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ ஆரம்பியுங்கள். மற்றவர்கள் கண்களுக்கு அது சிறப்பென்று தோன்றாமல் இருக்கலாம். ஆனால் ஆத்ம திருப்தியை நீங்கள் உங்கள் வாழ்வில் உணர ஆரம்பிப்பீர்கள்.

உங்களைக் கண்டறிந்த பின் எக்காரணம் கொண்டும் உங்களைத் தொலைத்துக் கொள்ளாதீர்கள். அப்படித் தொலைத்து விட்டால் கூடவே வாழ்வின் எல்லா நன்மைகளையும் தொலைத்து விடுவீர்கள் என்பது மட்டுமல்ல, கடவுள் உங்களைப் படைத்ததன் அர்த்தத்தையே அனர்த்தமாக்கி வாழ்வை வீணடித்து விடுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.